According to the Tamil Newspapers :-
ஓட்டோவிலிருந்து வீழ்ந்த சிறுவன் 13 நாட்களின் பின் உயிரிழப்பு!
வெள்ளிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2004, 1:43 ஈழம்
பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றி இறக்கும் ஓட்டோவில் இருந்து தவறி வீழ்ந்ததில் தலையில் படுகாயமடைந்து மயக்கமுற்றிருந்த சிறுவன் ஒருவன் 13 தினங்களின் பின் நேற்று அதிகாலை மரணமானான்.
யாழ். புனித ஜோன் பொஸ்கோ பாடசாலையில் கல்வி பயிலும் இருபாலை, கட்டப்பிராயைச் சேர்ந்த ஜோன்சன் விதுஷனன் (வயது 6) என்ற சிறுவனே இவ்வாறு அகால மரணமடைந்தான். கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஓடிக்கொண்டிருந்த ஓட்டோவில் இருந்து இந்தச் சிறுவன் திடீரெனத் தவறி தலையடிபட வீதியில் வீழ்ந்தான்.
நல்லு}ர் சட்டநாதர் வீதியில் இவ்விபத்து இடம்பெற்றது. அந்த இடத்திலேயே மயக்கமடைந்த சிறுவன் உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டான். தலையில் பலமாக அடிபட்டதால் உள்ளே இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கும் மயக்க முற்ற நிலையிலேயே சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சம்பவம் நடந்து 13 ஆவது நாளான நேற்று அதிகாலை சிறுவன் அங்கு உயிரிழந்தான்.
ஓட்டோவின் பின் ஆசனத்தில் மேலும்பல சிறுவர்களோடு ஒன்றாகக் கதவோரமாக அமர்ந்திருந்த இந்தச் சிறுவன் திடீரென வாயில் ஊடாக வெளியே வீழ்ந்துள்ளான் என்று கூறப்படுகின்றது. சந்தடி மிகுந்த நேரங்களில் பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வேகமாக செலுத்துவதாலும் நன்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத திறந்த வாகனங்களில் அளவுக்கு அதிகமாக சிறுவர்களை ஏற்றிச் செல்லுதல் போன்ற செயற்பாடுகளாலும் இது போன்ற அனர்த்தங்கள் ஏற்படுவதாக பொலீஸ் மற்றும் மருத்துவ வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது.