செல்வஸ்தான் நிலையைப் பார்த்தபோது
சொல்லத்தான் இல்லை சோகத்தில் வார்த்தைகள்
விளையாட்டுக் குழுவில் பதினொரு பேர் போல
களைகட்டி மகிழ்ந்த கவினுறு கலைக்கூடம்

அஸ்பெஸ்ற் ஓட்டின் அளவிலா சூட்டிலும்
மிஸ்பண்ணாது மகிழ்ந்த ஆனந்த வீடு
வேப்பமரக் காற்றை எங்கே தேடுவது
உப்புத் தண்ணிக் கிணற்றை எப்படி மறப்பது

ஆடுதொடா இலை தொடமுடியாது போனது
மாடு நின்ற இடம் வெறும் தரையானது
உடையார் நீர் விட்டு இரு மரம் சுட்டது
கிடையாத கூடு கிளிக்கு கிடைத்தது
உபதேசி வீரையா பேசுவது கேட்டது
அப்பாச்சி மாமிமார் அன்பு தொட்டது

மாஸ்ரர் கடை பார்த்து வாராது தூக்கம்
மிஸ்சான கடை பற்றி தீராத ஏக்கம்
அன்று சூசை மரியைத் தேடினார்
இன்று நம் ஆலயம் தாசனைத் தேடுகிறது
மூப்பர் பணிக்கு மீள்வது எப்போது
பேப்பர் நடுத்தெருவில் படிப்பது எப்போது

சாட்டித் தண்ணீர் குடிப்பது எப்போது
வாட்டிப் பனம் பண்டம் உண்பது எப்போது
வேப்பில் எப்போ ஊஞ்சல் ஆடுவது
தோப்பில் அன்னமன்னா எங்கே தேடுவது

வேலி அடைத்துக் களைப்பது எப்போது
கோலிக் குண்டடித்து இளைப்பது எப்போது
குளத்தில் எப்போது நீச்சல் அடிப்பது
குளிரில் எப்போது கரோல் படிப்பது

அடியப்பம் வடிவாக எப்போ சுடுவது
கொடிபிடித்து கூடுசுற்ற எப்போகூடுவது
நெல்லிக்காய் பறிக்க தடியெங்கே தேடுவது
நல்லினிய செறிஸ்பழம் எங்கே தேடுவது

முன்பெல்லாம் மேலே ஒழுக்குக்கூரைத் தொல்லை
இன்றெல்லாம் மேலே அண்டவெளி எல்லை
அப்போதெல்லாம் கதவு தடைப் போர்வை
இப்போதெல்லாம் தொலைநோக்குப் பார்வை

பதினொன்றில் பதியிழந்து பத்தானோம்
எண்மர் ஓர் நாட்டில் இருவர் மறு நாட்டில்
ஏழு பெண்களும் ஓர் நாட்டில்
ஏன் மூன்று ஆண்களும் மூன்று நாட்டில்

தேசம் விட்டுத் தேசம் போக கடவுச்சீட்டுத் தேவை
நேசம் தொட்டு நேசம்காண பாசம்தான் தேவை
முன்பிருந்த அத்திவாரத்தில் எழுந்தது இல்லம்
இன்றிந்த சிதைவும் இணையில்லா செல்வம்

அந்த அழகான அன்பான காலங்கள்
சொந்த அழியாத இன்னிசைக் கோலங்கள்
செல்வஸ்தான் தருகின்ற இனிய தத்துவம்
சொல்ல வருகின்ற அன்பின் மகத்துவம்

செல்வஸ்தான் படங்கள்
செல்வஸ்தான்
ஆக்கம்: கிளீற்றஸ் துரைசிங்கம்